சோடாவை கொடுத்து நிர்வாண வீடியோ எடுத்து 4 வருடங்களாக மிரட்டி கற்பழித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அசோக்குமார். இவர் மீது அதே போலீஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாக போலீசார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

நான் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் என்னிடம் புகாரை பெற்றுக் கொண்டார். மேலும் என்னுடைய செல்போன் எண்ணையும் கேட்டு பெற்றுக் கொண்டார்.

கற்பழித்தார்

அதையடுத்து அவர் அடிக்கடி என்னுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஒரு முறை வழக்கு தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி ஒரு இடத்திற்கு வரச்சொன்னார். நானும் அங்கு சென்றேன். அங்கு அவர் எனக்கு குடிக்க பாலும், குளிர் பானமும் கொடுத்தார். அதை குடித்த நான் சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்.

நான் மயக்கத்தில் இருந்தபோது அவர் என்னை கற்பழித்துவிட்டார். மேலும் என்னை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அவர் அடிக்கடி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு உல்லாசத்து அழைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் என்னுடைய ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

அடிபணிந்தேன்

அதனால் நான் அவருடைய மிரட்டலுக்கு அடிபணிந்தேன். அதை பயன்படுத்திக் கொண்ட அவர் கடந்த 4 வருடங்களாக என்னை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்தார். தற்போது நான் என்னை விட்டு விடும்படி அவரிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை மிரட்டுகிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் என்னுடைய 2 மகள்களையும் கற்பழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

அவருடைய மிரட்டல்களால் நான் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன். இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள என்னுடைய ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை கைப்பற்றி அழித்துவிட வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354(ஏ) மானபங்கம் செய்தல், 376(சி) அதிகாரம் மிக்க நபர்களால் மிரட்டி கற்பழிக்கப்படுதல், 506 கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ள சம்பவம் சிவமொக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.