சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பல்; எகிப்து அதிபர் அவசர உத்தரவு!

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. 1869-ம் ஆண்டு திறக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.

ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச்செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் இந்த கால்வாய் கட்டப்பட்டது.‌ சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. உலகளாவிய வர்த்தக கப்பல் போக்குவரத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ராட்சத சரக்கு கப்பலை கால்வாயின் கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 12 இழுவை படகுகள் பணியாற்றி வரும் நிலையில் அது போன்ற மேலும் 2 படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது வரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி வெற்றிபெறா விட்டால் கப்பலுக்கு உள்ளே உள்ள சரக்குகளை வெளியில் எடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் கப்பலை மீட்கும் பணி எவ்வளவு நாளாகும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இழுவைக் கப்பல் மூலம் எவர் கிவன் கப்பலை இழுக்கும் முயற்சிகள் நடந்து வந்தாலும் காற்றின் வேகம் காரணமாக தோல்வியடைந்து வருகின்றன.

இதையடுத்து கப்பலில் உள்ள 18 ஆயிரம் கண்டெய்னர்களை இறக்கி கப்பலை இழுக்கும் முயற்சிக்கு நீண்ட நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாற்று வழியை யோசித்து விரைந்து செயல்படுமாறு சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கு எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.

கப்பலின் சுமையை குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இன்றுக்குள் தொடங்கப்படாது எனன சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.