பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம்; எலிகள் குடித்து விட்டதாக பொலிசார் நாடகம்!

உத்தரப்பிரதேசம் பரேலி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் பீகாரில் இருந்து சட்டவிரோதமாக கடத்தபட்ட மது பாட்டில்களை பிடித்த போலீசார் அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர்.

இவற்றின் எண்ணிக்கையை திடீரெனச் சோதனை செய்தபோது அவற்றில் 1,400 பெட்டிகளில் இருந்த 1000 லிட்டர் மது மாயமானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதன் பொறுப்பாளர்களைக் கேட்டபோது அவற்றை எலிகள் சேதப்படுத்தி விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதை நம்பாத போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ் நிலையத்தின் ஆய்வாளர் இந்திரேஷ்பால் சிங் மற்றும் எழுத்தரான ரிஷால்சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சில போலீஸ் நிலையங்களில் பொருட்களைக் காணாமல் போகச் செய்து அவை சேதமடைந்ததாகக் கணக்கு காட்டப்படுவது உண்டு. மிகச் சிறிய எண்ணிக்கையிலான பொருட்கள் காணாமல் போனால் எலிகள் காரணமாகக் காட்டப்படுவதும் வழக்கமே. தற்போது காணாமல் போன மது பாட்டில்களின் எண்ணிக்கை பல ஆயிரம் பாட்டில்கள் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன் சிங் தெரிவித்துள்ளார்.