ஹெலிகாப்டரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றது ஏன்? காரணம் சொன்ன நடமாடும் நகைக்கடை ஹரி நாடார்!

தமிழக சட்டசபைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பனங்காட்டு படை கட்சி சார்பில் தமிழகத்தில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மிஸ்ரா நாடார், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சதிஷ் நாடார், திருவாடனை தொகுதியில் போட்டியிடும் பெருமாள் நாடார் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஹரிநாடார், ராக்கெட் ராஜா ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து தரையிரங்கினர்.

கிலோ கணக்கில் நகைகள் அணிந்தபடி ஹரிநாடாரும், கூலர்ஸ் அணிந்தபடி பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜாவும் தூசி பறக்க ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை அடுத்து அங்கு கூடியிருந்த பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர். கழுத்து முழுவதும் தங்க நகைகளோடு தங்க மகனாக வந்த ஹரிநாடாரை பார்க்க பெண்களும் திரண்டிருந்தனர். அவரை காண திரண்டிருந்த இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா, கருணாநிதி, கமல் ஆகியோர் தான் ஹெலிகாப்டரில் வர முடியும் என்கிற மாயையை முதலில் மக்கள் மத்தியில் உடைக்கவே நாங்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினோம். அரசியல்வாதிகள் யார் சொத்து சேர்க்காமல் உள்ளனர். வங்கிகளில் பணம் சேர்க்காமல் உள்ளனர்.

நான் உழைத்து சம்பாதித்து முறையாக வருமான வரியை கட்டி நகை போட்டுள்ளேன். மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லாததாலும், எங்கள் சமுதாயத்திற்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதாலும் தான் போட்டியிடுகிறோம்” என்றார். மேலும் பனங்கல்லை விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஹரி நாடார் தெரிவித்தார்.