தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இதையொட்டி இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி அங்கிருந்து காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்று கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாக அவர் பரப்புரை செய்தார்.

‘வெற்றி வேல், வீர வேல்’

இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடைக்கு வந்த நரேந்திர மோதி, தமது உரையை தொடங்கும் முன் அவருக்கு எல். முருகன் வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி தாராபுரம் வந்தார்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் பிரசாரம்

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.