கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான தொடர், இந்தியாவில் வைத்தே நடைபெறவுள்ளது.

இதில், மும்பை அணி கடந்த இரண்டு சீசன்களில், தொடர்ந்து கோப்பையை வென்றுள்ள நிலையில், சென்னை அணி கடைசியாக 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியிருந்தது. மற்றொரு அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடைசியாக 2014 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பின்னர், தொடர்ந்து 6 ஆண்டுகளாக அவர்கள் கோப்பையை கைப்பற்றியதில்லை.
கடந்த சீசனில், 5 ஆவது இடத்தை பெற்றிருந்த கொல்கத்தா அணி, ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருந்தது. இதனால், பல ஆண்டுகள் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் கருதி வரும் நிலையில், இந்த முறையாவது அந்த அணி நிச்சயம் கோப்பையை வென்று காட்டும் என எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan), ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அதில், அவரது ரசிகர்கள் கேட்ட பல விதமான கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்த நிலையில், ‘இந்த முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லுமா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஷாருக்கான் சொன்ன பதில் தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அவர் தனது ரிப்ளையில், ‘வெல்லும் என நம்புகிறேன். மேலும், அந்த கோப்பையில் தான் இனிமேல் டீ குடிக்க விரும்புகிறேன்’ என நக்கலாக பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இந்த பதில், நெட்டிசன்களிடையே அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முதல் போட்டியில், ஏப்ரல் 11 ஆம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.