‘பவுலிங்’ல மட்டும் இல்ல.. குணத்துலயும் ‘நட்டு’ கெட்டிக்காரர் தான்!..” ப்பா, நெனச்சாலே புல்லரிக்குது… நெகிழ்ந்து போன ‘ரசிகர்கள்’!!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் நடராஜன், மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்ததால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராக செல்ல வாய்ப்பு கிடைத்தது.

natarajan gifted his mahindra thar to his coach jayaprakash

அது மட்டுமில்லாமல், அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களால் நிறைந்த இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு மனதில் நிற்கும் வகையிலான இந்த வெற்றித் தொடரை அனைவரும் பாராட்டிய நிலையில், இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த நடராஜன், சுப்மன் கில், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இளம் வீரர்களுக்கு, அவர்களது திறமையைப் பாராட்டி, கார் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அறிவித்திருந்தார்.

அதன்படி, குறிப்பிட்ட வீரர்களுக்கு எல்லாம் அவர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் மஹிந்திரா ஷோரூம் மூலம், கார் பரிசளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வீரர் நடராஜனும், சமீபத்தில் இந்த காரை பரிசாக பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் செய்துள்ள செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நடராஜன் இன்று கிரிக்கெட் உலகில் கால் தடம்பதிக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயப்பிரகாஷ் என்னும் உடன்பிறவா சகோதரர். அவரது வழிகாட்டுதலின் பெயரில், கிரிக்கெட் போட்டிகள் ஆடி வந்த நடராஜன், ஐபிஎல் தொடர் மூலம் கவனிக்கப்பட்டு சர்வதேச அணியில் ஆட தேர்வானார். மேலும், ஐபிஎல் தொடரில், தனது ஜெர்சியில் பெயருக்கு முன்பு கூட, Jayaprakash என்பதை குறிக்கும் வகையில், JP என்ற எழுத்தை இடம்பெறச் செய்திருந்தார்.

அந்த அளவுக்கு, தனது கிரிக்கெட் பயணத்திற்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷை நடராஜன் மதிக்கும் நிலையில், தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசான மஹிந்திராவின் காரை, ஜெயப்பிரகாஷிற்கு அன்பளிப்பாக அளித்து அசத்தியுள்ளார்.

 

கிரிக்கெட் உலகில், இன்று ஒரு உயரத்தை நடராஜன் அடைந்திருந்தாலும், அதற்கு காரணமாக இருந்தவரை மறக்காமல், நடராஜன் செய்துள்ள இந்த செயல், அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது.