20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தால் மது பாட்டில்; தேர்தல் நூதனம்!

தேர்தலில் புதுவிதம்

எந்த தேர்தல் வந்தாலும் ‘குடி’மகன்களுக்கு கொண்டாட்டம் தான். அனைத்துக் கட்சி உறுப்பினர்களாகி குடிமகன்கள் மதுபாட்டில், பிரியாணியுடன் 200 ரூபாய் சம்பளம் என பிசியாகி விடுவார்கள். இப்படி தேர்தல் வினோதங்கள் எத்தனையோ உண்டு. அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தற்போது புத்தம் புது 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக கொடுத்து வாக்காளர்களுக்கு மது பாட்டில்கள் வாங்கிக் கொள்ள செய்து புதிய விதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

20 ரூபாய் டோக்கன்
புதுச்சேரி கலால்துறை தாசில்தார் மணிகண்டன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ், வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகா‌‌ஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று நோணாங்குப்பம் படகு குழாம் அருகே குபேரன் நகரில் உள்ள மதுக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த 2 பேர் புதிய ரூ.20 நோட்டுகளை கொடுத்து 48 குவாட்டர் மதுபாட்டில்களை வாங்கினர். இதைப்பார்த்ததும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவநேசன் (வயது 51), முருகையன் (52) என்பதும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்கள் வாங்கியதும், இதற்காக புதிய 20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

மதுக்கடைக்கு சீல்
இதை கேட்டதும் கலால்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதன் எதிரொலியாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நேற்று அந்த மதுக்கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் நேற்று அந்த மதுபான கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.