‘சொந்த ஊருக்கு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்’’; ரஜினிக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

சொந்த கிராமம்

நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர், புனேவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவடி கதேபதார் கிராமம் என்று கருதப்படுகிறது. அங்கு ரஜினியின் குடும்ப பெயரான ‘கெய்க்வாட்’ என்ற பெயர் கொண்ட பலர் வசித்து வருகிறார்கள். அந்த கிராமத்தினர், தங்கள் ஊருக்கு ரஜினியின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இது குறித்து அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதானந்த் ஜகதாப் கூறியதாவது:-

கர்நாடகத்துக்கு…
ரஜினியின் தாத்தா இந்த ஊரில் இருந்துதான் கர்நாடகத்துக்கு சென்றார். ரஜினி குடும்பத்துக்கு இங்கு நிலமும் உள்ளது. அவர் இந்த மண்ணின் மைந்தர். சில ஆண்டுகளுக்கு முன்பு, புனே அருகே லோனோவாலாவில் அவர் ஒரு படப்பிடிப்புக்காக ரஜினி வந்திருந்தபோது அவரை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் இந்தியில் பேசியபோது, அவர் மராத்தியில் பேசுமாறு சொன்னார். அப்போது, தனது சொந்த கிராமமான மாவடி கதேபதாருக்கு ஒருநாள் வருவதாக உறுதி அளித்தார். அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். அவருக்கு பால்கே விருது கிடைத்ததை அறிந்து ஒட்டு மொத்த
கிராமத்தினரும் பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.