மௌனித்தது ஈழத் தமிழர்களின் உரிமைக் குரல்; சீமான் வெளியிட்ட அறிக்கை!

ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாய் ஒலித்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்ந்துள்ளார்.

ஈழ மண்ணில் கொடும்போர் நடக்கும் காலங்களில் தேவாலயங்களை மக்களின் புகலிடமாக்கி பாதுகாத்தவரும், இலங்கை பேரினவாத அரசால் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்த தகவலை உலகிற்கு அளித்து, இலங்கையின் நயவஞ்சகத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியவருமான பேராயரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

பேராயராக இருந்தபோதிலும் மதம் கடந்து, பேரன்பு கொண்டு தமிழின மக்களின் பாதுகாப்பிற்கும், மறுவாழ்விற்கும் அயராது பாடுபட்ட அவரது தொண்டுநிறைந்த பெருவாழ்வு நிலைத்த புகழுக்குரியது.

பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ்தேசியத்தின் மீது நீங்காத பற்றுறுதியுடன், இனத்தை முதன்மைப்படுத்தி மக்களுக்கு அவராற்றிய மகத்தான பணிகளை தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறும் என அவர் வெளியிட்டுள்ள துயர் பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.