மாங்காய் அடித்த சிறுவர்களை மாட்டுச்சாணம் தின்ன வைத்த கொடுமை: அதிர்ச்சிச் சம்பவம்

தெலுங்கானா மாநிலத்தில் மாங்காய் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்களை கட்டி வைத்து அடித்து உதைத்து மாட்டுச்சாணத்தையும் தின்ன வைத்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மாங்காய் திருடியதற்காக 2 சிறுவர்களை கட்டி வைத்து மாட்டுச் சாணத்தை வலுக்கட்டாயமாக தின்ன வைத்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மகபூபாபாத்தில் உள்ள தொரூரில் உள்ள மாங்காய் தோப்பில் சிறுவர்கள் இருவர் மாங்காய் அடித்து தின்றுள்ளனர். இந்தச் சிறுவர்களின் வயது 16 மற்றும் 13.

அப்போது காவலாளிகள் இவர்கள் இருவரையும் பிடித்து பின்னால் கைகளை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் காவலர்களான யாக்கு மற்றும் ராமுலு இரு சிறுவர்களையும் குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் மாட்டுச்சாணத்தை தின்ன வைத்துள்ளனர்.

சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு காவலர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீது தவறான குற்றச்சாட்டின் பேரில் சட்டத்தைக் கையில் எடுத்து தண்டிப்பது குறித்த 342 பிரிவு சட்டம், அபாய ஆயுதங்களின் மூலம் காயமேற்படுத்துவதற்குரிய பிரிவு 324, அமைதியைக் குலைக்கும் வண்ணம் செயல்பட்டதற்கு எதிரான பிரிவு 504, குழந்தைகளைத் தண்டிப்பதைத் தடுக்கும் செக்‌ஷன் 75 ஆகியவற்றின் கீழ் இரு காவலாளிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறுவர்கள் தாங்கள் மாம்பழம் திருடச்செல்லவில்லை என்றும் காணாமல் போன நாயைத் தேடிதான் மாந்தோப்பு காம்பவுண்டுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

உண்மை என்னவென்று தெரியாமல் தோப்புக் காவலாளிகள் முரட்டுத் தனமாக சிறுவர்களை நடத்தியது குறித்து அங்கு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு சிறுவர்களும் தொரூரின் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அறியப்படக்கூடிய குற்றங்களில் தெலுங்கானா 3.7% பங்களிப்பு செய்து வருகிறது. 2019-ல் குற்றப்பதிவு வழக்குகள் 1,18,338 என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ல் தெலுங்கானாவில் 873 கற்பழிப்புகள், 839 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடத்தல் வழக்குகள் 2127 பதியப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2019-ல் 18,394 ஆகும். பணியிடங்களில் டார்ச்சர் வகையில் 24 வழக்குகள், 163 வரதட்சணைக் கொடுமை சாவுகள் நிகழ்ந்துள்ளன. 3 அமில வீச்சு வழக்கும் உள்ளது.

Contact Us