எங்கே போட்டாலும் தேடிப் பிடித்து வீடியோவை அழித்து வரும் பேஸ்புக் மற்றும் யூரியூப் !

பேஸ்புக் நிறுவனம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு காணொளியை, அவரது மருமகள் லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம், கடந்த ஜனவரி 2021-ல் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டட தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பக்கத்தை முடக்கியது நினைவுகூரத்தக்கது.

லாரா டிரம்ப், நியூ ஃபாக்ஸ் நிறுவனத்தில் செய்தி வழங்குபவர். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்த காணொளியை அவர் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்பின் காணொளியை நீக்கியது மற்றும் தன் கணக்கு தடை செய்யப்படுவது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சலையும் லாராவுக்கு அனுப்பியது. அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் லாரா டிரம்ப்.

“முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுவது போன்ற காணொளியை, லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம். டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் சார்பாக பகிரப்படும் பதிவுகள் நீக்கப்படும். அதோடு பகிரப்படும் கணக்குகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.