போனில் பேசிக்கொண்டே பெண்ணுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர்!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்தியா முழுவதும் தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கையில், மக்களுக்கு அதை போடுவதில் அலட்சியம் காட்டிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. மாண்டூலி ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு செவிலியர் தனது மொபைலில் பேசிக்கொண்டே, ஒரு பெண்ணுக்கு ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு பதிலாக இரண்டு டோஸ் அளவை போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தடுப்பூசி மையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இந்த வழக்கு குறித்து மையத்திற்கு தலைமை தாங்கியவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். கான்பூர் மாவட்டத்தின் தேஹாட்டின் மண்டாலி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த வியாழக்கிழமை கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் குமாரி தனது முதல் டோஸ் தடுப்பூசி பெற சென்றுள்ளார்.

அவருக்கு அர்ச்சனா என்ற துணை நர்ஸ் (Auxiliary Nurse Midwife) தடுப்பூசி டோஸை வழங்கினார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குமாரி கண்காணிப்புக்காக 30 நிமிடங்கள் தனியாக அமரவைக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே குமாரி தனது கைகள் வீக்கம் அடைந்ததைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அதிக வலியை அனுபவித்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அவருக்கு தடுப்பூசி போட்டபோது நர்ஸ் போனில் பேசியபடியே இருந்துள்ளார். எனவே, அந்த நர்ஸ் மொபைலில் பேசிக்கொண்டே தனக்கு இரட்டை டோஸ் தடுப்பூசி கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

தனக்கு இரண்டு டோஸ் ஊசி போட்டது குறித்து கமலேஷ் குமாரி நர்ஸிடம் விசாரித்தபோது, மன்னிப்பு கேட்காமல் அர்ச்சனா குமாரியை கோபமாக கடிந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கமலேஷ் குமாரியின் மகன் கூறியதாவது, தடுப்பூசியின் இரட்டை அளவு காரணமாக, எனது தாயார் கையில் லேசான வீக்கம் உருவானது. இருப்பினும் கடுமையான அறிகுறிகள் எதுவும் என் தாய்க்கு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இத்தகைய கவனக்குறைவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் புகாரைத் தொடர்ந்து தடுப்பூசி மையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 5,99,045 பேர் கோவிட் -19 நோய்த்தொற்றுகளிலிருந்து விடுபட்டுள்ளனர். மேலும் இதுவரை 3,49,22,434 கோவிட் -19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் சுமார் 6.51 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 30.31 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.