ரயிலில் சிக்கிய முதியவரைக் காப்பாற்றிய காவலர்; ஹீரோவானார் எப்படி?

ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோபூர் ரயில்வே ஸ்டேஷனில் அண்மையில் விபத்து ஒன்று நடைபெற்றது. காவலரின் துரித நடவடிக்கையால் முதியவர் உயிரிழக்காமல் காப்பற்றப்பட்டது. அதாவது, புறப்படும் ரயில் ஒன்றில் ஏற முற்படும் முதியவர், எதிர்பாரதவிதமாக ரயிலில் ஏற முடியாமல் கீழே விழுகிறார். ரயிலுக்கும், ப்ளாட்பார்முக்கும் இடையில் சிக்கிக் கொண்ட அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். நொடிப்பொழுதில் காவலர் செய்த செயல் விபத்தில் சிக்கிய முதியவரின் உயிரைக் காப்பாற்றியது.

45 நொடிகள் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், அந்த காவலரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுபோன்ற சவாலான நேரத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய காவலருக்கு உளமாற பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்ற காவலர்களை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவலரின் செயலுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகரும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் முதியவரின் கவனக்குறைவான செயலுக்கு பலரும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என்ற விதியை இந்த வீடியோவை பார்த்து மக்கள் திருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெட்டிசன்கள், விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ரயில்கள் புறப்பட்டவுடன் கதவுகள் ஆட்டோமேடிக்காக மூடுமாறு ரயில்களை தரம் உயர்த்த வேண்டும் எனவும் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாம் எனவும் யோசனை கூறியுள்ளனர்.

ரயில் விபத்துக்களை குறைக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இரவு நேரங்களில் செல்லும் ரயில்களில் இனி 11 முதல் காலை 5 மணி வரை செல்போன்களை சார்ஜ் செய்யும் ப்ளக்குகளின் மின்சாரம் துண்டிக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் ராஞ்சியில் அடுத்தடுத்து ஏற்பட்ட ரயில் தீ விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. மேலும், ரயில்களில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் வகையில் 139 என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 139க்கு அழைத்து பின்னர் 6 – ஐ தேர்வு செய்தால் விபத்து குறித்து தெரிவிக்கலாம். 3 – ஐ அழுத்தினால் கேட்டரிங் புகார்களையும், 5 -ஐ அழுத்தினால் ஊழல் புகார்களையும் தெரிவிக்க முடியும்.