இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய 3 பேர் கைது..!

ஒடிசாவில் போதிய வரதட்சணை கொடுக்காத மருமகளை நிர்வாணமாக்கி அடித்து தாக்கிய மாமனார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணை மாமனார் வீட்டைச் சேர்ந்தவர்கள் தெருவில் இழுத்து வந்து கட்டைகளை கொண்டு அடித்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பதைபதைய வைத்தது. அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நிகிராய் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கும்போது மணமகனின் வீட்டார் அதிகபட்ச வரதட்சணை கேட்டுள்ளனர். இந்நிலையில், முடிந்த அளவுக்கு மணமகன் வீட்டில் வரதட்சணை கொடுத்து திருமணத்தையும் நடத்தியுள்ளனர். ஆனால், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமனார், மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

அதன் உச்ச கட்டமாக சம்பவ நாளன்று கணவனின் வீட்டார் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து அடித்து தாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட மாமனார் சந்திரா நாயக் மற்றும் அவரது இரு மகன்கள் முன்னா, நிரஞ்சன் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் நிர்வாண கோலத்தில் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.