பஸ் நிலையத்தில் பயங்கரம்; பெண் உயிருடன் எரித்துக்கொலை; கள்ளக்காதலனும் உடல் கருகி சாவு!

கள்ளக்காதல்
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 46). இவர், கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே தங்கி, தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.இவருக்கும், வடபழனி பஸ் பணிமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த முத்து (48) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாந்தி, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் அங்கு வந்த முத்து, தான் கையில் வைத்து இருந்த பெட்ரோல் கேனை திறந்து தன் மீதும், அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தனது கள்ளக்காதலி சாந்தி மீதும் ஊற்றினார்.
தீ வைப்பு
பெட்ரோல் வாசனை வந்ததால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, தனக்கு அருகில் முத்து தீப்பெட்டியுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எழுந்து வந்து அவரை தடுப்பதற்குள், முத்து கையில் இருந்த தீக்குச்சியை உரசி சாந்தி மீது தீ வைத்தார்.அவரது உடலில் குப்பென்று தீப்பிடித்தது. அப்போது முத்து உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கீழே விழுந்து இருவரும் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அங்கு தூங்கி கொண்டிருந்த சக பயணிகள், திடுக்கிட்டு எழுந்து அலறி அடித்து ஓடினர்.இந்த காட்சிகள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இருவரும் பலி
இது குறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், இருவரது உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி, முத்து இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வேறு ஒருவருடன் பழகியதால்…
அதில், சாந்தி, முத்து இருவரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி துப்புரவு பணி செய்து வந்தனர். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக சாந்தி, முத்துவிடம் பழகுவதை தவிர்த்து விட்டு, வேறு ஒருவருடன் பழகி வந்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த முத்து, தனது கள்ளக்காதலி சாந்தியை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்று விட்டு, தானும் தீக்குளித்து செத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Contact Us