மகன், மகளுடன் தூக்குப்போட்டு பெண் தற்கொலை கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீத முடிவு!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(வயது52). அந்த பகுதியில் உள்ள ஒரு நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி(47). தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுடைய மகன் அஸ்வின்(18), மகள் அகல்யா (17). இவர்கள் இருவரும் பிளஸ்-2 படித்து வந்தனர். செல்வி மற்றும் அவருடைய 2 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள்.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் ராகவன் இறந்தார். அதன்காரணமாக செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது. மனவலியை பொறுத்துக்கொண்டு செல்வி, தனது குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். ஆனாலும் கணவருடைய இறப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவுசெல்வி ஊட்டியில் உள்ள தனது தங்கை விஜயலட்சுமியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது கணவர் இறந்தது முதல் மிகுந்த மன வேதனையுடன் இருப்பதாகவும், தனது மகன், மகளுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறிஉள்ளார். அதன்பின்னர் இணைப்பை திடீரென்று துண்டித்து விட்டார்.

இதனால் பதற்றம் அடைந்த விஜயலட்சுமி உடனே செல்வியின் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் செல்வியின் வீ்ட்டிற்கு விரைந்து சென்றபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என நினைத்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு கதவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் செல்வி தனது மகன், மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us