மாமா எனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க’… ‘பெற்றோர் மாஸ்டர் பிளான்’… ‘மலேசியாவில் இருந்த காதலன்’… ஆனா, இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்காத பெற்றோர்!

காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்பதை அறிந்த காதலன் மலேசியாவிலிருந்து அதிரடியாக வந்திறங்கினார்.

Newly married couple seeks police protection in Karur

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெலுங்கு பட்டியைச் சேர்ந்தவர் சரவணகுமார். பொறியியல் படித்துள்ள சரவணகுமார் மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் லால்குடி தாளகுடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் சிந்தியா. எம்.எஸ்.சி. படித்துள்ளார்.

இதனிடையே  சரவணகுமாரும், சிந்தியாவும் 5 வருடங்களாகக் காதலித்து வந்தனர். மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், சிந்தியாவின் காதலுக்குப் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு நிற்காமல் மகளுக்கு வேறொரு வரனும் பார்த்து வந்தனர். சிந்தியாவுக்கு உடனடியாக திருமணம் செய்யவும் பெற்றோர் தீர்மானித்தனர்.

இந்த விஷயம் சிந்தியாவுக்குத் தெரிய வந்த நிலையில், இப்படியே சென்றால் நிலைமை கையை மீறிச் சென்று விடும் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக மலேசியாவில் இருக்கும் தனது காதலன் சரவணகுமாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சரவணகுமார் கடந்த 8-ந்தேதி மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர் 9-ந்தேதி விராலி மலை முருகன் கோவிலில் வைத்து சரவணகுமார், அவரது பெற்றோர் முன்னிலையில் சிந்தியாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த சிந்தியாவின் பெற்றோர் அதிர்ந்து போனார்கள்.

இதற்கிடையே புதுமண தம்பதிக்கு சிந்தியாவின் பெற்றோர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கேட்டு சிந்தியா தனது காதல் கணவருடன் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்து தஞ்சம் அடைந்து, புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, காதல் ஜோடியை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

காதலிக்குத் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பதை அறிந்த காதலன் உடனடியாக மலேசியாவிலிருந்து பறந்து வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us