பிரபல பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை!-பாதிரியார் முதல் உறவினர்கள் வரை விசாரிக்க முடிவு

ஹைதராபாத்தைச் சேர்ந்த, பிரபல பின்னணி பாடகி, தன்னுடைய 15 வயது மகளை சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள தங்கையின் வீட்டில் பாதுகாப்புக்காக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்.

ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார். இதையடுத்து போலீஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்திலுள்ள சர்ச்சுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் பாதிரியார், பாடகியின் தங்கை கணவர், பாடகியின் தங்கை, உறவினர் ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “நடிகர் விக்ரம் பிரபு நடித்த படத்தில் பிரபல பாடகி பாடியிருக்கிறார். அவரின் மகளை சாலிகிராமத்திலுள்ள தங்கை வீட்டில் விட்டுவிட்டு பாடகி வேலைக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தங்கையின் உறவினர் மகன் அன்பாகப் பேசியிருக்கிறார். அதன் பிறகு அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அடுத்து உறவினர் குடும்பத்தினருக்குத் தெரிந்த பாதிரியாரும் சிறுமியிடம் அநாகரிகமாக நடந்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி நான்கு பேரிடமும் விசாரணை நடத்தவிருக்கிறோம்” என்றனர்.

பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மதபோதகர் மற்றும் உறவினர்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us