மாஸ்டர் பட தயாரிப்பாளரின் படத்தில் இணைந்த அஜித் பட இயக்குனர்!

கடந்த பொங்கலன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இந்த படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார், மறைந்த நடிகர் முரளியின் மகனும், அத்ர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தாக்கத்தின் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி போனது. இதனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பிரபல நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் அன்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தால், ஊரடங்கால் மூடியிருந்த திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்ததோடு அல்லாமல், அமேசான் பிரைம் தளத்திலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட்டு கல்லா கட்டினார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.

இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாக உள்ள அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்னும் தலைப்பிடபடாத இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இவர் அஜித் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த பில்லா, ஆரம்பம் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவரின் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் வெளியான யட்சன் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் ஆகாஷ் முரளி. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன். இவரின் அண்ணன் ஆதர்வாவும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவுக்கும், ஆகாஷ் முரளிக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Contact Us