வீடியோ வெளியிட்டு இளம்பெண் பரபரப்பு பேச்சு; அதிர்ந்துபோயுள்ள அரசாங்கம்; நடந்தது என்ன?

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் நான் பல்டி அடித்ததாக தவறான தகவல் பரவுகிறது என்றும், ரமேஷ் ஜார்கிகோளி மீது கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து தான் பின்வாங்கவில்லை என்றும் வீடியோ வெளியிட்டு இளம்பெண் தெரிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ வௌியானது

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக ரமேஷ் ஜார்கிகோளி மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது. இந்த ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம்(மார்ச்) 30-ந் தேதி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் இளம்பெண் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார், தொடர்ந்து 6 நாட்கள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தார்கள். ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி கொரோனாவை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். அவரது வீட்டு தனிமை முடிந்த பின்பு அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

ஹனிடிராப் முறையில்…

இதற்கிடையில், கடந்த 12-ந் தேதி திடீரென்று சிறப்பு விசாரணை குழு போலீசார் முன்பு இளம்பெண் ஆஜரானார். அப்போது தன்னை பயன்படுத்தி நரேஷ்கவுடா, ஸ்ரவன் ஆகியோர் ஹனிடிராப் முறையில் ரமேஷ் ஜார்கிகோளியை சிக்க வைத்திருப்பதாகவும், நீதிபதியிடம் தான் சுயமாக வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும், அதனால் தான் நீதிபதியிடம் சுயமாக வாக்குமூலம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ஆபாச வீடியோ விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கூறிய குற்றச்சாட்டில் இருந்து இளம்பெண் பல்டி அடித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இளம்பெண் மறுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் விளக்கம் அளித்து பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளம்பெண் பேசி இருப்பதாவது:-

பல்டி அடிக்கவில்லை

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி சம்பந்தப்பட்ட வழக்கில், நான் பல்டி அடித்து விட்டதாகவும், ஹனிடிராப் முறையில் அவரை சிக்க வைத்திருப்பதாகவும் தொலைகாட்சி சேனல்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த வழக்கில் நீதிபதியிடம் நான் மீண்டும் வாக்குமூலம் அளிக்க இருப்பதாகவும், நான் கூறிய குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதாகவும் தவறான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அது உண்மை இல்லை.

சிறப்பு விசாரணை குழு போலீசார் முன்பு நான் விசாரணைக்கு ஆஜரானது உண்மை தான். ஆனால் வழக்கு சம்பந்தப்பட்ட கூடுதல் சாட்சி, ஆதாரங்கள் என்னிடம் இருந்தது. அந்த ஆதாரங்களை போலீசாரிடம் கொடுக்கவே விசாரணைக்கு ஆஜரானேன். போலீசாரிடம், எழுத்து பூர்வமாக எதுவும் எழுதி கொடுக்கவில்லை. நான் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கவில்லை. ரமேஷ் ஜார்கிகோளி மீது கூறிய குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருக்கிறேன்.

மனமாற்றம் செய்ய முயன்றாலும்…

என்னுடைய பெற்றோரிடம் நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது உண்மை தான். அவர்கள் என்னை மனமாற்றம் செய்ய முயன்றதாக கூறுவது உண்மை இல்லை. அவர்கள் என்னை மனமாற்றம் செய்ய முயன்றாலும், நான் பொய் சொல்ல முடியுமா?. உண்மையை மட்டுமே சொல்லி வருகிறேன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த வழக்கில் என்னிடம் விசாரித்துள்ளனர். என்னுடைய பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி ஜாலியாக வலம் வருகிறார். அவருக்கோ, அவரது உறவினர்களுக்கோ விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். ரமேஷ் ஜார்கிகோளிக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் ஏற்கனவே நான் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு இளம்பெண் கூறியுள்ளார்.

Contact Us