அவுஸ்டேலியாவில் போதையில் 4 பொலிஸ்காரர்களை கொன்ற நம்மாளுக்கு ஏற்பட்டுள்ள கெதி!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் உள்ள நெடுஞ்சாலையில் மொஹிந்தர் சிங், தனது லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையிலும், தூக்க கலக்கத்திலும் இருந்ததாக தெரிகிறது.‌ இதனால் அவர் நெடுஞ்சாலையில் உள்ள அவசர வழி பாதைக்கு லாரியை திருப்பி தாறுமாறாக ஓட்டி சென்றார்.‌ பின்னர் அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது லாரியை மோதினார். இந்த கோர சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து மொஹிந்தர் சிங்கை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொஹிந்தர் சிங் மீதான வழக்கு விசாரணை விக்டோரியா மாகாண சுப்ரீம் கோர்ட்டில் சுமார் ஓராண்டாக நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இதில் மொஹிந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மொஹிந்தர் சிங்குக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Contact Us