நாளைக்கு உனக்கும் வயசாகும் டா, வேண்டாம் பா’… ‘பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த கொடூரம்’… நெகிழவைத்த காவல்துறை!

பெற்ற தாய்க்கு இப்படி ஒரு கொடுமையைச் செய்ய ஒரு மகனுக்கு எப்படி மனது வந்தது எனக் கேட்ட தோன்றும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Thiruvallur : Man threw his mother in roadside bush

தனது ரத்தத்தைப் பாலாகக் கொடுப்பவள் தான் தாய். எந்த உறவுக்கும் ஈடுயிணையற்ற ஒரு உறவு தான் அம்மா என்ற உறவு. சிறு வயதில் தனது மார்பிலும், தோளிலும் போட்டுத் தாலாட்டிய தாயை அவளுக்கு முடியாத காலத்தில் கண்ணில் இமையைக் காப்பது போலப் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். ஆனால் திருவள்ளூரில் நடந்த சம்பவம் அந்த மகனுக்கு மனதில் இரக்கம் என்ற ஒன்று இருக்கிறதா எனக் கேள்வியை எழுப்பியுள்ளது.

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள முட்புதரிலிருந்து மூதாட்டி ஒருவரின் முனங்கல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கவனித்த அந்த பகுதி மக்கள்  அங்குச் சென்று பார்த்த போது, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தரையில் கிடப்பது தெரியவந்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த மூதாட்டி கதறி அழுதார். அவர் மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த காந்திமதி என்றும் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாகக் கருதி தமது இரண்டாவது மகன் சங்கர் என்பவர் வீட்டிலிருந்து தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து முட்புதரில் வீசிச் சென்றதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட போலீசார் சொந்த மகனே பெற்ற தாயை முட்புதரில் வீசி சென்றதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். இதையடுத்து இந்த விவகாரத்தில்  மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நாளை அந்த மகனுக்கும் வயதாகும் என்பதைக் காலம் அவருக்குக் காட்டிக்கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Contact Us