மகளுக்கு நடந்த கொடுமைக்கு பழிக்குப்பழி.. சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த கொடூரம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பலாராஜூ. இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு நடந்த அநீதிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இதில் ஆறு மாதம் மற்றும் இரண்டு வயது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அப்பலாராஜூவின் மகளை அதேப்பகுதியை சேர்ந்த விஜய் கிரண் என்பவர் 2018-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விஜய் கிரண் கைது செய்யப்பட்டார். தற்போது விஜய் கிரண் ஜாமீனில் வெளிவந்துள்ளார். நேற்று அதிகாலை விஜய் கிரண் வீட்டிற்கு சென்ற அப்பலாராஜூ அங்கு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் விஜய் தந்தை, தாய், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்த உறவினர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த 6பேரும் நிகழ்விடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், அப்பலாராஜூவின் மகள் விஜய் கிரண் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏப்ரல் 9, 2018-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விஜய் கிரண் மனைவி உஷாராணிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண் அரைநிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வைத்து மிரட்டியதாக உஷாராணி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அப்பாலாராஜூவின் மகன் தான் விஜய்கிரணுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதற்கு அடுத்தநாளே அதாவது ஏப்ரல் 10, 2018-ல் உஷாராணி தரப்பில் இருந்து காவல்நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அப்பலாராஜூ மற்றும் அவரது உறவினர்கள் மூன்று சேர்ந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தனது கணவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் எதிர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் கிரண் , உஷாராணி அவரது குழந்தைகள் இந்த கிராமத்தை விட்டே சென்று விட்டதாக கூறப்படுகிறது. விஜய் கிரண் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார். ஆந்திராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக உஷாராணி தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் உறவினர் ஒருவர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கிராமத்திலே தங்கியுள்ளார். இந்நிலையில் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை உடனே கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பலாராஜூ வை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us