வாலிபர் தூக்குப்போட்டு இறந்த வழக்கில் திடீர் திருப்பம்; ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்தது அம்பலம்!

பெங்களூரு: பெங்களூருவில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்டரஹள்ளியில் வசித்தவர் அவினாஷ்(வயது 24). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் அவினாசின் சகோதரி கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறி இருந்ததாவது:-

2 பேர் கைது

எனது சகோதரர் அவினாஷ் வேண்டும் என்றே தற்கொலை செய்யவில்லை. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் அவினாசை ஹனிடிராப் கும்பல் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஆபாச வீடியோக்களை…

அதாவது எம்.பி.ஏ. பட்டதாரியான அவினாசுக்கு, முகநூலில் நேகா சர்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். மேலும் 2 பேரும் ஆபாசமாக பேசி வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ காலும் பேசி இருந்ததாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் அவினாஷ் நிர்வாணமாக வீடியோ கால் பேசும் காட்சிகளை, நேகா சர்மா வீடியோ எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி அவிநாசிடம், நேகா சர்மா பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அவினாஷ் ரூ.21 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். ஆனாலும் அவரிடம் மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹனிடிராப் முறையில்…

இதனால் பயந்து போன அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது. இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவினாசிடம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் ஹனிடிராப் முறையில் பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது.
இதையடுத்து ராஜஸ்தானுக்கு சென்ற கே.ஆர்.புரம் போலீசார் ஜாவித், ரூபல் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Contact Us