காதலிப்பது போல நடித்து 8 இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்!

பெங்களூரு: பெங்களூருவில், காதலிப்பது போல நடித்து 8 இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம்பெண்ணுக்கு மிரட்டல்

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கும், பெங்களூருவை சேர்ந்த திவாகர்(வயது 27) என்பவருக்கும் முகநூல் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி திவாகர் பழகி வந்துள்ளார். மேலும் இளம்பெண்ணுக்கு, திவாகர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோவை எடுத்து கொண்டு, அதனை வெளியிடுவதாக கூறி திவாகர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரை தேடிவந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த திவாகரை பேடரஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம்பெண்களுடன் திவாகர் பழகுவார். பின்னர் அந்த இளம்பெண்களை காதலிப்பதாக கூறி நடித்து, அவர்களுடன் ஆபாசமாக இருப்பதை திவாகர் வீடியோ எடுத்து வைத்து கொள்வார். பின்னர் அந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி இளம்பெண்களுக்கு மிரட்டல் விடுப்பது, அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது போன்றவற்றை திவாகர் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.

இளம்பெண்களிடம் தான் ஐ.ஏ.எஸ்.க்கு படித்து வருவதாகவும், விரைவில் பதவி கிடைத்து விடும் என்றும் கூறி பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை 8-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்து கைதான திவாகரிடம் பேடரஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us