ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் குழுவின் ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிழவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஸ்ரெடோ நகரின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து கடந்த வியாழக்கிழமை காசா முனையில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஸ்ரேடோ நகரின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்தது. இதனால், யாருக்கும் காயமோ? பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்ரெடோ நகர் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா முனையில் உள்ள ஹமாஸ் போராளிகளின் ராணுவ நிலைகள், ஆயுத உற்பத்தி மையங்கள், ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆயுத உற்பத்தி இடங்கள், ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் கிடங்குகள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Contact Us