கடலில் கலக்கப்போகும் ஃபுகுஷிமா அணுக்கழிவு நீர்… அபாயத்தில் பசிபிக்… உலகிற்கே ஆபத்தா?

ஃபுகுஷிமா அணு உலையிலிருக்கும் அணுக்கழிவுநீர் கடலில் கொட்டப்படும் என்று ஜப்பானிய அரசு எடுத்துள்ள நியாயமற்ற முடிவால் பசிபிக் பெருங்கடல் அணுக்கழிவுகளால் மோசமாக மாசடையும்.

2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை பேரிடரை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியா உட்பட அணு ஆற்றலைச் சார்ந்திருக்கும் உலக நாடுகள் அனைத்துக்குமாகச் சேர்த்து அந்த ஒற்றைப் பேரிடர் எச்சரிக்கை செய்தி அனுப்பியது. ‘அணு ஆற்றலை நம்பாதீர்கள்’ என்று அங்கிருந்த அணு உலையில் ஏற்பட்ட விபத்து உலக மக்களிடம் உரக்கச் சொன்னது. அதையும் மீறி, இன்றளவும் அணு உலைகளின் மீது அபார துணிவோடு, மக்கள் பாதுகாப்பைப் புறக்கணித்து அரசுகள் செயல்பட்டு வருவது தனிக்கதை. ஆனால், ஏற்கெனவே பேரிடரை நிகழ்த்திய ஃபுகுஷிமாவில் மீண்டுமொரு பேரிடரை நிகழ்த்தத் திட்டமிருக்கிறது ஜப்பான் அரசு.

2019-ம் ஆண்டின் இறுதியில், ஜப்பான் அரசாங்கம் 22 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை அழைத்து, ஃபுகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான டன்கள் அணுக்கழிவு நீரை என்ன செய்வதென்று ஆலோசித்தது.

ஃபுகுஷிமாவில் போதிய இட வசதியில்லாததால், அங்கிருக்கும் நீரிலிருந்து பெருமளவிலான கதிர்வீச்சு மிக்க பொருள்களை நீக்கிவிட்டு, பெருங்கடலில் நீரை வெளியிடுவதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். ஜப்பானிய அதிகாரிகள் முன்வைத்த இந்தத் `தீர்வு’க்கு அங்குக் கூடியிருந்த நிபுணர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று ஜப்பானிய வெளியுறவுத்துறை கூறியது. தற்போது, ஜப்பானிய அரசு அந்த முடிவை அமல்படுத்தப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வு” என்று தென்கொரியா, ஜப்பானிய தூதருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. தைவானும் இதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்புகளுக்காக முன்வைக்கப்பட்ட அத்தனை காரணங்களையும் ஜப்பான் அறிவியல் பூர்வமில்லாதவை என்று கூறிப் புறந்தள்ளியதோடு, இது உலகளவில் வழக்கமாக நடப்பதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஜப்பானின் இந்த முடிவு, அதற்கு அண்டை நாடுகளிடம் இருக்கும் நம்பகத்தன்மையை விலை கொடுக்கும் நிலைக்குத்தான் அதைத் தள்ளியிருக்கிறது. சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ், இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளது. “இட வசதி போதவில்லை என்றால், கடலில் கொட்டுவதற்குப் பதிலாக கூடுதல் இடவசதியை ஏற்படுத்துங்கள். அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுமென்ற இந்த முடிவு ஆபத்தானது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இவ்வளவு ஏன், ஜப்பானிய மக்களுக்கே இந்தத் திட்டத்தில் உடன்பாடில்லை. கடந்த ஆண்டின் இறுதியில், ஜப்பானிய பத்திரிகையான `தி அஸாஹி ஷிம்புன்’ இதுகுறித்து நடத்திய வாக்கெடுப்பில் 55 சதவிகிதம் மக்கள் இந்த முடிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஃபுகுஷிமாவிலேயே மக்கள் இதனால் உள்ளூர் மீன் வளத்தைப் பெருமளவில் இது பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், தற்போதுதான் அந்தப் பகுதியில் ஓரளவுக்கு மீண்டும் மீன்வளம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த முடிவால் அவர்கள் மீண்டும் பல இன்னல்களுக்கு ஆக வேண்டியிருக்கும் என்று அஞ்சுகின்றனர்.

ஃபுகுஷிமா அணு உலையில் 12.5 லட்சம் டன் அணுக்கழிவு நீர் ஆயிரத்துக்கும் அதிகமான டேங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சேதமடைந்த மூன்று உலைகளைக் குளிர்விக்கும் முயற்சியில், நாளொன்றுக்கு கூடுதலாக 150 டன் தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்தத் தண்ணீரில் இருக்கும் கதிர்வீச்சு மிக்க பொருள்களைச் சக்திவாய்ந்த வடிகட்டி இயந்திரங்களின் மூலம் வடிகட்டிய பிறகு, வெளியேற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கின்றது. அதிலிருந்து ட்ரிட்டியம் (Tரிடிஉம்) என்ற பொருளை மட்டும் முழுமையாகப் பிரித்தெடுக்க முடியாது. ஆனால், அது அதிகளவிலான கதிர்வீச்சைக் கொண்டிருக்காது, இந்தச் செயல்முறைகளை எல்லாம் கடந்து வரும் தண்ணீரில் குடிநீரில் கலந்திருக்கும் கதிர்வீச்சைவிடக் குறைவாகவே இருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறுகின்றனர். இந்தச் செயல்முறையைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு முதல் சிறுகச் சிறுக அணுக்கழிவு நீர் பெருங்கடலில் வெளியேற்றப்படும் என்று ஜப்பான் அறிவித்துள்ளது.

இது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை, ஃபுகுஷிமாவிலும் டோக்கியோவிலும் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், மக்களிடையே பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்தப் பகுதி முழுக்க கதிர்வீச்சைக் கண்டறியும் டோசிமீட்டர் கருவிகளைப் பொருத்தியுள்ளார்கள். மேலும், அந்தப் பகுதியிலிருந்து கிடைக்கின்ற கடல் உணவுகளில் கதிர்வீச்சு அளவைப் பரிசோதித்த பின்னரே அனுப்புவதாகவும் அரசுத்தரப்பு கூறியுள்ளது. ஃபுகுஷிமா பேரிடருக்குப் பின்னர், அங்கிருந்து கிடைக்கும் கடல் உணவுகள் அனைத்துமே கதிர்வீச்சு குறித்த பரிசோதனைக்குச் சென்ற பிறகே வெளியே வருகின்றன. பேரிடருக்குப் பின்னர் பெருமளவு மீன் வளம் மக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லை. இந்நிலையில், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளால், இப்போது வெளியேற்றப் போகும் அணுக்கழிவு நீரினால் ஏற்படும் கூடுதல் பாதிப்புகளை எப்படிக் குறைக்க முடியும் என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அதோடு, டோக்கியோ மின் ஆற்றல் நிறுவனத்தின் (TEPCO), இத்தனை ஆண்டுக்கால முயற்சிகளுக்குப் பிறகும்கூட, அங்கிருக்கும் அணுக்கழிவு நீரில் பல்வேறு ஆபத்தான ஐசோடோப்புகள் நிறைந்திருக்கின்றன. மேலும் பல்வேறு வடிகட்டும் செயல்முறைகளில் ட்ரிட்டியம் தவிர மற்ற அனைத்து கதிரியக்கப் பொருள்களையும் பிரித்தெடுக்கப் போவதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், ட்ரிட்டியத்தை உட்கொள்ளும்போது புற்றுநோயை உண்டாகும் ஆபத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த கசுவே சுசுகி, “ஜப்பானிய அரசு மேற்கொள்ளப்போகும் இந்த நியாயப்படுத்த முடியாத நடவடிக்கையால் பசிபிக் பெருங்கடல் அணுக் கழிவுகளால் மோசமாக மாசடையும். சிறப்பான தொழில்நுட்பங்களின் உதவியோடு கதிரியக்கம் நிறைந்த நீரைச் சேமித்து வைத்து பல்வேறு கட்ட செயல்முறைகளுக்கு உள்ளாக்குவதை விட்டுவிட்டு, மிகவும் சிக்கனமான முடிவை எடுக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று விமர்சித்துள்ளார். மேலும், ஜப்பானின் இந்த முடிவு ஐக்கிய நாடுகள் மாநாட்டின் கடல் தொடர்பான சட்டங்களுக்குப் புறம்பானது என்று கிரீன்பீஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பிரச்னை என்னவெனில், இந்த அணுக்கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றப்பட்டால், பாதிக்கப்படப்போவது ஃபுகுஷிமா கடலோரப் பகுதி மட்டுமல்ல. பசிபிக் பெருங்கடலைச் சார்ந்திருக்கும் மற்ற நாடுகளிலும் இதன் பாதிப்பு தெரியலாம். உதாரணத்துக்கு, 2016-ம் ஆண்டு, கனடிய வஞ்சிர மீனில் கதிர்வீச்சு கண்டறியப்பட்டது. அதேபோல், ஒரேகனிலுள்ள கோல்ட் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட கடல்நீர் மாதிரிகளில் ஃபுகுஷிமாவின் கதிர்வீச்சு நிறைந்த சீசியம்-134 இருப்பது தெரியவந்தது. 2018-ம் ஆண்டு நடந்த ஆய்வின்போது கலிஃபோர்னியாவில் உள்ள வைன்களில் அதன் கதீர்வீச்சு கண்டறியப்பட்டது. ஏற்கெனவே, பெருங்கடல் வழியே அணு உலையின் கதிர்வீச்சு பல்வேறு பகுதிகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில், இப்போது 12.5 லட்சம் டன் அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றும் இந்த முயற்சி, என்ன மாதிரியான விளைவுகளைக் கடல் வளத்தின் மீது ஏற்படுத்துமோ என்ற அச்சம் பசிபிக் பெருங்கடலைச் சார்ந்திருக்கும் நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு, பசிபிக் பெருங்கடலின் கடல் வளங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த முடிவுக்கு எதிராக 183,754 பேர் கையெழுத்திட்ட மனுவைத் தயாரித்துள்ளார்கள். ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பிறகு அங்கிருந்து இடம் பெயர்ந்த, சுமார் 40,000 மக்கள் இன்னமும் அங்கு மீண்டும் குடியேற முடியாமல் காத்திருக்கின்றனர். ஃபுகுஷிமா அணு உலையிலிருக்கும் அணுக் கழிவுகளைக் கையாள்வதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் ஆகும். அந்தச் செயல்முறையை முழுமையாக மேற்கொள்வதை விட்டுவிட்டு, குறுக்கு வழிகளைத் தேடுவதால் மேலதிகச் சேதங்களைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று சர்வதேச சூழலியல் அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

ஆனால், ஜப்பானிய அரசாங்கமோ தலையிலிருக்கும் சுமையை எங்காவது இறக்கி வைத்தால் போதும் என்பது போல், தங்களின் பொறுப்பிலிருக்கும் அணுக்கழிவுகளைக் கடலில் கொட்டிவிட்டால் பிரச்னை முடிந்துவிடும் என்று நினைக்கிறது. ஏற்கெனவே ஏற்பட்ட பேரிடரின் பாதிப்புகளே இன்னும் தணியாத நிலையில், இதன் விளைவுகளையும் அந்த மக்களின் தலைமீது ஏற்றுவது நியாயமற்ற செயல் என்று கிரீன்பீஸ் உட்பட உலகளாவிய சூழலியல் அமைப்புகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

Contact Us