இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இலங்கையில் மர்மம்!

இலங்கை முழுவதும் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு, வத்தளைப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜா-எல பகுதியில் 15 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மொத்தம் 07 சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, ஐஸ் போதைப்பொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றை கைப்பற்றுவதற்கான இயலுமை பொலிஸாருக்கு கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பின்னர் கடந்த 12ஆம் திகதி சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 110 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 05 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து 2.433 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 128 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் தலைமறைவாகியுள்ள நிபுண என்ற நபரினாலேயே, இந்த போதைப்பொருள் விநியோகம் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Contact Us