வாய்ப்பில்லை ராஜா.. கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. காரணம் இதுதான்.. உலக சுகாதார மையம் பகீர்

உருமாறிய கொரோனா போன்ற குழப்பம், சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை காரணமாக கொரோனா முடிவுக்கு வர இன்னும் பல காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 5,88,271 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.

நிலைமை மோசம்:

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானோம், உலக நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். போக்குவரத்து, வணிகம் பழையபடி நடைபெற வேண்டும். பொதுமக்களும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். எங்களின் விருப்பமும் இதுதான். ஆனால், தற்போது நிலைமை நேர்மாறாக உள்ளது. உலகிலுள்ள பல நாடுகளிலும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கொரோனா பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம். உலகில் தினசரி பல்லாயிரம் மக்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நம்மால் முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும்.

தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் அதீதமாக நம்புகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறானது. கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையிலும் சிக்கல்களால் உள்ளன. இதனால் வைரஸ் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வராது. கொரோனா முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும். அதேநேரம் இதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்தாண்டில் முதல் இரண்டு மாதங்கள் வைரஸ் பரவலும் சரி உயிரிழப்பும் சரி குறைவாகவே இருந்தது என்பதை நாம் மறுந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மரியா வான் கெர்கோவ், நாம் இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் உள்ளோம். தொடர்ந்து 7 வாரமாகத் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரவல் 9% அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் 5% அதிகரித்துள்ளது. இது சற்று கவலைக்குரிய ஒரு செய்தி தான் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. உலகெங்கும் தற்போது வரை சுமார் 78 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட மக்கள் மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது இல்லை. இத்துடன் உருமாறிய மற்றும் மரபணு மாறிய வைரஸ் பரவலும் சேர்ந்துள்ளதால், கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Contact Us