அரசு தகவல்படி 78 பேர் மரணம்; எரித்த உடல்களோ 650-க்கும் அதிகம்; என்ன மர்மம் நடக்கிறது அந்த ஊரில்..

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை படுவேகமாகப் பரவி வருகிறது. செவ்வாயன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனாவினால் 2,000 பேர் பலியாகியுள்ளனர்.

அதாவது மார்ச் 20ம் தேதி 2007 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் லடாக் மரணங்கள் சேர்க்கப்படவில்லை. இந்தத் தகவல் கோவிட்19 இந்தியா டால் ஆர்க் என்ற தனித்த இணையதளத்தின் தினசரி தகவலின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அரசு தரப்பு அளிக்கும் கோவிட் மரண எண்ணிக்கைக்கும், உண்மை நிலவரத்த்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதாக முன்னணி ஆங்கில நாளேடு பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) அன்று அரசு தகவல்களின்படி கொரோனா வைரஸ் மரணம் 78 ஆகும். ஆனால் குஜராத்தின் 7 நகரங்களில் கோவிட் 19 நடைமுறைகளின்படி, விதிமுறைகளின் படி மொத்தம் 689 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன என்பதே அந்த நாளேடு முன் வைக்கும் பகீர் செய்தியாகும். கொரோனா மரணங்களை மாரடைப்பு மரணங்களாகவும் நீண்ட நாளைய சர்க்கரை நோய் மரணங்களாகவும் குஜராத்தில் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் திடீர் மாரடைப்பு, கிட்னி பிரச்சினை என்றும் கொரோனா மரணங்களுக்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. கேள்வி என்னவெனில் வேறு காரணங்களினால் மரணம் ஏற்பட்டால் உடலை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ஏன் அரசு எரிக்க வேண்டும்? அல்லது புதைக்க வேண்டும்?

குறிப்பாக அகமதாபாத்தின் கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 16ம் தேதி 200 உடல்கள் பிரேதக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதே போல் அந்த நாளிதழின் செய்திகளின் படி சூரத் நகரின் 2 மருத்துவமனையிலிருந்து சுமார் 190 உடல்கள் தகனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜாம்நகரில் உள்ள குருகோவிந்த் மருத்துவமனையிலிருந்து தினசரி சராசரி 24 உடல்கள் தகனத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இது போதாதென்று தனியார் மருத்துவமனைகளின் பித்தலாட்டங்களும் நடந்து வருகின்றன. அகமதாபாத் தனியார் மருத்துவமனை ஒன்றில் 58 வயது நபர் கோவிட்டினால் இறந்துள்ளார், அதை மறைத்து கிட்னி தோல்வியினால் மரணம் என்று தனியார் மருத்துவமனை மருத்துவ அறிக்கை தயாரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அதாவது குஜராத்தில் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கியதிலிருந்து அரசு தரப்ப்பு கொரோனா புள்ளி விவரங்கள் ஒன்று கூற, மருத்துவமனைகள், இடுகாடுகளிலிருந்து கிடைக்கும் செய்திகள், புள்ளி விவரங்கள் வேறு ஒன்றாக இருந்து வருவதாக அந்த முன்னணி ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் இறுதியிலிருந்தே குஜராத்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் 18ம் தேதி மாநில சுகாதாரத்துறை குறிப்பிடும் போது 110 பேர் மரணமடைந்ததாகத் தெரிவித்தது. ஆனால் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா அதிகாரிகள் 500க்கும் மேற்பட்ட மரணங்கள் என்று கூறுகின்றனர்.

Contact Us