பாகிஸ்தான் எல்லை அருகே பிடிபட்ட புறா; நடந்துள்ள விசித்திர சம்பவம்!

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஒரு புறா ஒன்றின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து பறந்து வந்த புறா ஒன்று எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் தோள் மீது வந்து அமர்ந்தது.

அப்போது புறாவை தூக்கிய பாதுகாப்புப் படை வீரர் அதன் காலில் ஒரு துண்டுச் சீட்டு இருந்ததை பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த சீட்டினை எடுத்து பிரித்து பார்த்த போது அதில் ஒரு மொபைல் எண் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து எழுத்துப் பூர்வமாக உள்ளூர் Khangarh காவல்நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த புறாவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். புகாரில் இது குறித்து விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புறா விவகாரம் குறித்து பேசிய சீனியர் காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் தாஹியா, புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். புறா ஒரு பறவை என்பதால் அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியுமா என எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சாத்திய அறிக்கையை சட்டத்துறையினரிடம் கேட்டுள்ளோம். என்றார். மேலும் புறா காலில் இருந்த துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்த மொபைல் எண் குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

தற்போது அந்த புறா Khangarh காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கூட புறாக்கள் இது போன்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளன. ஆனால் இதுவரை புறா மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதில்லை. தீவிரவாத நடவடிக்கைகளில் புறாக்களுக்கு பயிற்சியளித்து தீவிரவாத செயல்களுக்காகவும், தகவல் தொடர்புக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us