இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம்

இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில உள்ளூர் ஊடகங்கள் அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற நீர்மூழ்கிக் கப்பல் வழக்கமான பயிற்சியில் கலந்துகொண்டது. அப்போது பாலிக்கு வடக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் அந்த நீரில் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பலைத் தொடர்பு கொள்ள இந்தோனேசிய ராணுவம் எடுத்த முயற்சிகளுக்கும் எவ்வித பலனையும் தரவில்லை. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இந்தோனேசிய ராணுவ தளபதி ஹாடி தஜ்ஜான்டோ உறுதி செய்துள்ளார். காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேட ராணுவம் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்குச் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏவுகணை செலுத்தும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையின்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது. ஆனால், சுமார் 700 மீட்டர் ஆழத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட்டதாகக் கடற்படை நம்புவதாக சில உள்ளூர் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன. இருப்பினும், இந்த தகவலை ராணுவம் சார்பில் யாரும் உறுதி செய்யவில்லை மேலும், அந்த நீர்மூழ்கிக் கப்பல் எப்படி மாயமானது, ஏன் அது ராணுவத்துடனான தகவல் தொடர்பை இழந்தது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது மாயமாகியுள்ள இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமான இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனி நாட்டில் கட்டமைக்கப்பட்டது. இந்தக் கப்பல் 1980களின் முற்பகுதியிலிருந்து ராணுவ சேவையில் உள்ளது. இந்தோனேசியாவிடம் தற்போது ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இருப்பினும், கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கையை எட்டாக உய்த்த அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.

Contact Us