இளம்பெண்ணின் படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பி வாலிபரை மயக்கிய மூதாட்டி; ஜாக்கிரதை ஆண்களே!

நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அந்த பெண்ணின் குரலில் மயங்கிய வாலிபர் பின்னர் அந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து வந்தார்.

இதற்கிடையே, அந்த வாலிபரின் செல்போனுக்கு அந்த பெண் தனது படம் என்று கூறி, அழகான இளம்பெண்ணின் படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த இளம்பெண்ணின் அழகில் மயங்கிய வாலிபர் அந்த பெண்ணை தீவிரமாக காதலிக்க தொடங்கினார். மேலும் தனக்கு அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறினார்.

இதனை அந்த வாலிபரின் குடும்பத்தினரும் ஏற்று கொண்டு, பெண்ணை நேரில் பார்த்து திருமணம் நிச்சயம் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன்படி, வாலிபர் அந்த பெண்ணின் முகவரியை தேடிக் கண்டுபிடித்து, குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரில் சென்றார்.

அப்போது அந்த பெண்ணின் முகவரியில், சுமார் 65 வயதான மூதாட்டி மட்டும் தனியாக இருந்தார். எனவே, அவர் தனது காதலியின் பாட்டியாக இருக்கலாம் என்று வாலிபர் கருதினார். தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் வாலிபர் பேசினார்.

அப்போது அந்த மூதாட்டிதான் செல்போனில் இனிமையான குரலில் பேசி ஏமாற்றியதை அறிந்து வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனக்கு செல்போனில் அனுப்பப்பட்ட படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால படம் என்று கருதிய வாலிபர் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்களுடன் ஏமாற்றத்தில் திரும்பி சென்றார்.

மேலும் இதுதொடர்பாக அந்த வாலிபர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும், இளம்பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இதுபோல் அவரிடம் வேறு யாரும் ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதற்கிடையே, அந்த பதிவில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால புகைப்படம் கிடையாது, அது தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படம் என்று கூறி, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வாலிபர், மூதாட்டி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி, பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டில் உள்ள இளம்பெண்ணின் படத்தை வாட்ஸ்-அப்பில் வாலிபருக்கு அனுப்பி வைத்து ஆசையாக பேசியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூதாட்டியை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சமூக வலைதளத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக அந்த வாலிபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Contact Us