முல்லைத்தீவில் பதற்றம்; வெடித்தது குண்டு; ஒருவர் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாக உள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது. இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வபுரம் முல்லைத்தீவைச் சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் எனவும் காயமடைந்த நபர் வட்டுவாகல் முல்லைத்தீவைச் சேர்ந்த 20 வயதுடைய செல்வகுமார் சயந்தரூபன் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us