வேலையிழந்த நெருக்கடியிலும் நெகிழ வைக்கும் தம்பதியின் செயல்!

வதோதரா தம்பதி கொரோனாவால் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு இறுதிச் சடங்குகளை செய்வதன் மூலம் தன்னலமற்ற செயலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உலகின் பல முக்கிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அவ்வாறு உயிரிழப்போரின் உடல்களால் மயானங்கள் நிரம்பி வழியும் கொடூர நிலையும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையில் குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் ஒரு தம்பதியின் செயல் மனிதத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த தம்பதி, கொரோனாவால் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு இறுதிச் சடங்குகளை செய்வதன் மூலம் தன்னலமற்ற செயலுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். பெருந்தொற்று காலம் தொடங்கியபோது வேலையிழந்த இந்த தம்பதி, குடும்பத்துடன் கடந்த ஒரு வருடமாக ஒரு மயானத்தில் வசித்து வருவது அதிர்ச்சிக்குரியதாக அமைகிறது. இப்படி ஒரு துயரத்தின் மத்தியிலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பேருதவியாக அமையும் இவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கன்ஹயலால் ஷிர்கே. இவர் வதோதராவில் பெயிண்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பொதுமுடக்கத்தின் போது வேலை இழந்ததால், வருமானத்திற்கு வழியின்றி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மயானம் ஒன்றில் தஞ்சம்புகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய உதவுவதன் மூலம் ஷிர்கேவும் அவரது மனைவியும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முடிந்த அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர். சில நேரங்களில் , மின்சார தகனத்தில் வேலை செய்யும்போது பல சவால்களை சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார் ஷிர்கே. கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தொட உறவினர்கள்கூட அச்சப்படுகின்றனர். அவ்வாறு இருக்க எரியூட்டப்பட்ட உடல்களின் அஸ்தியை தன்னார்வலர்கள் உதவியுடன் ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கவும் உதவுவதாகவும் சில சமயங்களில் தனது சொந்த செலவில் இதை செய்வதாகவும் கூறுகிறார்.

ஷிர்கே மற்றும் அவரது மனைவியின் இந்த தன்னலமற்ற செயல் பற்றி அறிந்த சில தன்னார்வ அமைப்புகள் உதவி செய்ய முன்வந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் தங்கள் அன்பிற்குறியவர் இறந்தால் நெருங்க தயங்குவோர் மத்தியில் யாரென்றே தெரியாதவர்களில் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உதவிவரும் ஷிர்கே போன்றோர், மனிதம் மரணிக்கவில்லை என்பதை உணர்த்திகொண்டுதான் இருக்கின்றனர்.

Contact Us