அவசர அவசரமாக திருமணம் முடித்த தமிழ் ஜோடிகள்; அசர வைக்கும் காரணம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேவேளை நேற்று சுபமுகூர்த்த தினம் ஆகும். இதை கருத்தில்கொண்டு தான், ஊரடங்கிலும் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும், திருமண நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் கடந்த 24-ந்தேதி அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் முழு ஊரடங்கின்போது கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பும் அடங்கும். இதையடுத்து ஏற்கனவே கோவில்களில் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் அனைத்துமே நேற்று அவசர அவசரமாக அருகில் உள்ள திருமண மண்டபங்களிலும், சமுதாய நலக்கூடங்களிலும் நடந்தன.
கோவில்கள் முன்பு திருமணம்
என்னதான் மண்டபங்களில் திருமணம் நடந்தாலும் இறைவன் சன்னிதானத்தில் திருமணம் நடைபெறுவது தான் சிறப்பு என்று மணமக்கள் எண்ணினர். மேலும் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தவர்களும் அரசின் அறிவிப்பு காரணமாக எளிமையான முறையிலேயே திருமணம் செய்துகொள்ள ஆயத்தமானார்கள்.
இதனைத்தொடர்ந்து கோவில்கள் அடைக்கப்பட்டாலும் வாசல்களில் நின்றாவது திருமணம் செய்து கொள்ள பலர் விரும்பினர். இதையடுத்து சென்னையில் உள்ள பல்வேறு கோவில்கள் முன்பு நேற்று திடீர் திருமணங்கள் அரங்கேறின. திருமணம் முடிந்து கோவில் வீதிகளிலும், அருகில் உள்ள தெருக்களிலும் புதுமண தம்பதிகளாக மாலை சகிதமாக உற்சாகமாக வலம் வந்தனர். இதனால் கோவில் வாசல்கள் திருமண மேடைகளானது. தெருக்கள் வரவேற்பு கூடமானது.
ஜோடியாக வலம் வந்த தம்பதியினர்
சென்னை வடபழனி கோவில் முன்பு நேற்று பல ஜோடிகள் முக கவசம் அணிந்தபடி திருமணம் செய்து கொண்டனர். நல்ல நேரம் தவறவிடக்கூடாது என்பதால் அவசர அவசரமாக இந்த திருமணங்கள் அரங்கேறின. மணமக்களுடன் நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலரே வந்தனர். சிலர் ஜோடிகளாக மட்டுமே வந்து திருமணம் செய்துகொண்டனர். கோவில் வாசல் முன்பு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டி, இறைவனை மனமுருக வேண்டி கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கோவிலை சுற்றி ஜோடியாக வலம் வந்தனர். சிலர் மோட்டார் சைக்கிளில் ஜோடியாக கோவிலுக்கு வந்தனர். திருமணம் முடிந்து தம்பதியாக அதே மோட்டார் சைக்கிளில் பறந்தனர். கோவில் முன்பு நடந்த திருமணம் செய்து கொண்டோர் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
இறைவன் சன்னதி முன்பு…
திருமணத்தை தொடர்ந்து புதுமண தம்பதிகள் திருமண மண்டபங்களுக்கு சென்று அங்கு பெற்றோர், உறவினர்களின் ஆசீர்வாதத்தையும், வாழ்த்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து புதுமண தம்பதியினர் சிலர் கூறுகையில், ‘‘கோவில்களில் திருமணம் நடப்பதே நமது பண்பாடு. அதனால் எங்களின் திருமணம் கோவில்களில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக ஊர் கூடி திருமணம் செய்ய முடியவில்லை. எனவே எளிமையாக இறைவன் சன்னதி முன்பு திருமணம் செய்ய விரும்பினோம். அதன்படி திருமணம் செய்து கொண்டோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’, என்றனர்.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு கோவில்கள் முன்பும் நேற்று அவசர அவசரமாக திருமணங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Contact Us