ஆன்லைனில் நடந்த திருமணம்; எப்படி செய்துள்ளார்கள் தெரியுமா?

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்சிங் டோனி.

இவருக்கும் மஞ்சு கன்யாள் என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இரு வீட்டாரும் கடந்த 2 மாதங்களாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மணமகன் உமேஷ்சிங் டோனிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்தார்.

கோப்புபடம்

கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமணத்தை எப்படி நடத்துவது என்பதில் இரு வீட்டாருக்கும் குழப்பம் ஏற்பட்டது. திருமணத்தை சில தினங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று இரு வீட்டாரும் ஆலோசித்தனர்.

அப்போது திருமணத்தை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த புரோகிதர் புதிய யோசனை ஒன்றை தெரிவித்தார். மணமகன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்தி முடிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். இந்த யோசனையை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அவர்களது கிராமத்தில் வித்தியாசமான முறையில் உமேஷ்-மஞ்சு திருமணம் நடைபெற்றது. ஆன்லைனில் இருவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். உமேஷ் சார்பில் மணமகளுக்கு உறவினர் ஒருவர் தாலி அணிவித்தார்.

ஆன்லைன் திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. மணமகன் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் உறவினர்கள் மட்டும் விருந்தில் பங்கேற்றனர்.

Contact Us