விடுதலைப்புலிகளின் தலைவரது அதிகாரத்தைவிடவும் இது பயங்கரமானதாம்; எச்சரிக்கும் சிங்களம்!

கொழும்பு துறைமுக நகர திட்ட சட்டமூலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு அதிகாரத்தை விட அதிக அதிகாரங்களை கொண்டிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ரணில் விக்கிரமசிங்க 2001- 2004 காலப்பகுதியில் பிரதமராக இருந்தவேளை வடக்கு கிழக்கில் பெரும்பாலான பகுதிகளை விடுதலைப்புலிகளின் தலைவர் தனது அதிகாரத்தில் வைத்திருந்தார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என நாட்டு மக்கள் கூறிய நிலையில் தற்போது ஒருநாடு இரு சட்டம் என ஒப்புக்கொண்டதில் தான் ஆச்சரியமடைவதாக தெரிவித்துள்ளார். நோர்வேயின் சமாதான உடன்படிக்கையின் மூலம் வடக்கு கிழக்கில் தனியான மாநிலமொன்றை உருவாக்க பிரபாகரனுக்கு அனுமதி வழங்கியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

2009 இல் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் தமது சொந்த சட்டம் பொலிஸ் மற்றும் அதற்கான சீருடை என்பவற்றை கொண்டிருந்தனர். இந்தநிலையில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் அது சீன கொலனியாக மாறும் என தற்போது கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இது சீன கொலனியாக மாற்றமடையும் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது என்னவென்றால், போரின் போது பிரபாகரன் வைத்திருந்த பகுதியை விடவும் அதிக சக்தி கொண்டதாக இருக்கும். ஒரு நாடு ஒரு சட்டம் என்ற மக்கள் தற்போது ஒரே நாட்டிற்கு இரண்டு சட்டங்களைக் கொண்டுள்ளதை ஏற்றுக் கொள்வது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் 2015 தொடக்கம் 2019 வரை பிரதமராக இருந்த போது கொழும்பு துறைமுக நகரம் சட்டவிரோதமாக கொழும்பு துறைமுகத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் என சில நாடுகள் தமது கவலைகளை என்னிடம் எழுப்பியிருந்தன.

எனினும் துறைமுக நகரத்திலிருந்து நாட்டின் ஏனைய இடங்கள் கண்காணிக்கப்படுவதை எனது அரசாங்கம் விரும்பவில்லை. இது தொடர்பில் எழுப்பப்பட்ட கவலைகளை சீனாவிடம் பகிர்து கொண்டதாகவும் அதற்கான தீர்வை பெறும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us