எலிக்கு வைத்த விஷத்தில் கல்லூரி மாணவர் பலி!

மதுக்கூர் அருகே எலிக்கு வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை தின்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், கார்த்திக்(வயது 19), கவிதாஸ்(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கார்த்திக், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18-ந் தேதி மாலை கார்த்திக் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் டி.வி. மீது இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிய கார்த்திக், திடீரென வாந்தி எடுத்தார். அப்போது அவருடைய தாய் தமிழ்ச்செல்வி, ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது, டி.வி. மீது இருந்த வாழைப்பழத்தை தின்றதாக கார்த்திக் கூறி உள்ளார்.

இதனால் பதறிபோன தமிழ்ச்செல்வி, அந்த பழம் எலிக்காக வைத்திருந்த விஷம் கலந்த பழம் என கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திக்கை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கார்த்திக் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலிக்காக வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழம் என்பதை அறியாமல், அதை தவறுதலாக தின்று கல்லூரி மாணவர் இறந்தது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Contact Us