9 நாட்கள் ஐசியூ பிரிவில் சிகிச்சை: கொரோனாவை வீழ்த்திய 105 வயது கணவர், 93 வயது மனைவி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், 105 வயது நிரம்பிய கணவரும் அவரது 93 வயது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிகழ்வு அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தை சேர்ந்த 105 முதியவர் தெஹ்னு சவான் மற்றும் அவரது 95 வயது மனைவி மோடாபாய் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த தம்பதி லட்டூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

தம்பதியருக்கு கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், 9 நாட்கள் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த தம்பதியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

105 முதியவர் தெஹ்னு சவான் மற்றும் அவரது 95 வயது மனைவி மோடாபாயும் கொரோனாவை வீழ்த்தி குணமடைந்து வீடு திரும்புள்ள நிகழ்வு அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் உள்ளது.

Contact Us