வெளியில் தெரியாத வேர் கேணல் மனோகரன் அண்ணா (மனோ மாஸ்டர்) அவர்களின் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை-
கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கிறது.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன்,அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள்,பிரிவுகளுக்கும் தனது தனது படைத்துறை பங்களிப்பை வழங்கினார்.முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர் பௌதீகம்,வேதியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக்கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார்.

அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வலராற்றில் பதிக்கவேண்டியது இந்த போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும். குறிப்பு – கேணல் மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், விழுப்புண் அடைந்திருந்தது பின்னர் வீரச்சாவடைந்த கேணல். கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி அவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

-ஈழம் ரஞ்சன்-

Contact Us