மோடி பதவி விலக வேண்டும்’ ஹாஸ்டாக் முடக்கப்பட்டு விட்டது ஏன்? ‘பேஸ் புக்’ நிறுவனம் அளித்துள்ள விளக்கம்!

நேற்று தொடர்ந்து 8-வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 3,645 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் கூடிய விரையில் பத்திரமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

சமூக ஊடகங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், பிளாஸ்மா நன்கொடையாளர்கள், வென்டிலேட்டர்கள், உயிர்காக்கும் மருந்துகள் தேடி கோரிக்கைகள் மழையாக பொழிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை பிரதமர் மோடி சரிவர கையாளவில்லை, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இதையொட்டி ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ‘ரிசைன் மோடி’(‘மோடியே பதவி விலக வேண்டும்’) என்ற ‘ஹாஸ்டாக்’ நேற்று முன்தினம் வைரலானது.

ஆனால் திடுதிப்பென்று இந்த ‘ஹாஸ்டாக்’ முடக்கப்பட்டது. அதில் தங்கள் கருத்துக்களை பதிவிட முயன்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. “தற்காலிகமாக இங்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பதிவுகளில் சில உள்ளடக்கங்கள் எங்கள் சமூக தரத்துக்கு எதிரானது” என அறிவிப்பு வந்தது. இது பலருக்கும் பெருத்த அதிர்ச்சியை அளித்தது.

பொதுவாக பேஸ்புக் சமூக வலைத்தளம், ஹாஸ்டாக்குகளையும், பதிவுகளையும் பல்வேறு காரணங்களை கூறி முடக்குவது வழக்கமான நடவடிக்கைதான்.

பின்னர் அந்த முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ‘பேஸ்புக்’ நேற்று விளக்கம் அளித்தது.

இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது:-

நாங்கள் தவறுதலாக அந்த ‘ஹாஸ்டாக்’கை முடக்கி விட்டோம். இந்திய அரசு எங்களை கேட்டுக்கொண்டதால் நாங்கள் அதைச் செய்யவில்லை. இப்போது அதை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Contact Us