வரதட்சணைக் கொடுமை : வீடியோ பதிவு செய்துவிட்டு பெண் தற்கொலை…

தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் எம்.ஈ பட்டதாரியான 29 வயது சுஜா. சுஜாவுக்கும் விருதுநகர் மாவட்டம் மணிப்பாறைப்பட்டியைச் சேர்ந்த 31 வயதான வீரராகவனுக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. வீரராகவன், ஆர்.ஆர். நகரில் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வீரராகவனின் தம்பி கார்த்திக் என்பவருக்கு, சுஜாவின் தங்கையை பெண் கேட்டுள்ளனர்.

ஆனால் சுஜாவின் பெற்றோர் மறுத்து விட்டதால், வீரராகவன், அவரது பெற்றோர் கந்தசாமி – அமுதா தம்பதி குடும்பத்தினர் சுஜாவைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். வீரராகவன் குடும்பத்தாருடன், சாத்தூரில் வசிக்கும் அவரது சித்தி திலகா உள்ளிட்ட சில உறவினர்களும் சுஜாவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறிது காலம் பொறுத்திருந்த சுஜா, வேறு வழியின்றி பெற்றோரிடம் கூறியுள்ளார் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தலாம் என பெற்றோர் ஆறுதல் கூறியிருந்தனர். எனினும் நாளுக்குநாள் சித்ரவதை அதிகரித்ததால், ஏப்ரல் 19ம் தேதி தனது குழந்தையுடன் சுஜா, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். புதன்கிழமை இரவு கணவனுடன் சுஜா செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழன் அதிகாலையில் தனது படுக்கையறையில் சுஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக, கணவர், மாமியார் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக தான் இந்த முடிவை எடுப்பதாகவும் தனது குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனவும் கதறி அழுதபடி ஒரு வீடியோ பதிவு செய்து அதை பெற்றோருக்கும், கணவன் வீட்டாருக்கும் அனுப்பி விட்டு தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார் சுஜா.

மனைவி இறந்ததற்கு கூட வீரராகவன் வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்களை அணைத்து வைத்து விட்டதாகவும் சுஜாவின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மேற்கு காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Contact Us