கள்ளக்காதலைக் கைவிட மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் 44 வயதான சென்னபசப்பா – 40 வயதான கவுரம்மா. இந்த தம்பதிக்கு 14 வயதி்ல் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாகலூர் சர்க்கிள் பகுதியில் வாடகை வீட்டில் இந்த தம்பதி குடியேறினர். அருகில் உள்ள பைரவர் கோயிலில் சென்னபசப்பா குருக்களாகப் பணியாற்றி வந்தார். 7 நாட்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது முருத்தன் ஜெயா என்ற இளைஞர் வழிபாட்டு முறைகளையும் மந்திரம் கற்றுக் கொள்ளவும் சென்னபசப்பாவிடம் உதவியாளராக சேர்ந்தார்.

சென்னபசப்பா வீட்டிலேயே தங்கியிருந்த அந்த இளைஞர், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி வந்தார். இந்த நிலையில்தான் அந்த இளைஞருக்கும் கவுரம்மாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி, சென்னபசப்பா கோயில் பூஜைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய போது இளைஞரும் மனைவியும் தனிமையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவரைப் பார்த்த அதிர்ச்சியில் இளைஞர் முருத்தன் ஜெயா தப்பியோடி விட்டார். இதையடுத்து சென்னபசப்பா தனது மனைவியை கண்டித்தும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆத்திரமடைந்த சென்னபசப்பா, மனைவியைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

வியாழன் அன்று கவுரம்மாவிற்கு பிறந்தநாள் வந்ததால் அன்று புதிய சேலை எடுத்துக் கொடுத்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் சென்னபசப்பா. பின்னர் கோயிலுக்கு செல்லலாம் என்று கூறி, வேப்பனஹள்ளி அருகே உள்ள கே.என்.போடூர் சென்று அங்குள்ள மலை மீதுள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். போகும்போதே, நைலான் கயிறு மற்றும் கத்தியை மறைத்து கொண்டு சென்றுள்ளார் சென்னபசப்பா.

சாமி கும்பிட்டு விட்டு கீழே இறங்கி வரும் வழியில் திடீரென மறைத்து வைத்திருந்த நைலான் கயிற்றால் மனைவி கழுத்தில் இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் கத்தியால் ஆத்திரம் தீரும்மட்டும் மனைவியின் உடலில் சரமாரியாகக் குத்தினார்.

சடலத்தை அங்கேயே விட்டு விட்டு ஓசூருக்கு வந்து அங்குள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் நடந்த இடம் வேப்பனஹள்ளி என்பதால் வேப்பனஹள்ளி போலீசாரிடம் சென்னபசப்பா ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு பெண்ணின் தவறான உறவால் இன்று அந்த குடும்பமே உருக்குலைந்து, இரண்டு குழந்தைகள் தாய் தந்தையின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Contact Us