ஆக்சிஜன் காலியானது… மருத்துவமனையில் டாக்டர் உள்பட 8 பேர் உயிரிழந்த சோகம்!

கொரோனா வைரசின் கொடூர தாக்குதல் நாட்டின் சுகாதார கட்டமைப்பை நிலைகுலையச் செய்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளும் உதவி செய்துள்ளன. ‘
எனினும், மருத்துவமனைகளுக்கு அந்த ஆக்சிஜன் சென்று சேருவதற்குள் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் (கோப்பு படம்)
அவ்வகையில், டெல்லி பத்ரா மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் தீர்ந்துபோனதால், தீவிர சிகிச்சையில் இருந்த ஒரு டாக்டர் உள்ளிட்ட 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ‘சரியான நேரத்தில் எங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மதியம் 12 மணிக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனது. அதன்பின்னர் 1.35 மணிக்கு ஆக்சிஜன் கிடைத்தது. எனவே, எங்கள் டாக்டர்களில் ஒருவர் உள்பட 8 பேரை இழந்துவிட்டோம்’ என மருத்துவமனை தெரிவித்தது.
பத்ரா மருத்துவமனையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாது முறையாக ஆக்சிஜன் தீர்ந்துபோயிருக்கிறது. கடந்த மாதம் 24ம் தேதியும் இதேபோன்று ஆக்சிஜன் தீர்ந்துபோனது. ஆனால், ஓரிரு நிமிடங்களுக்குள் ஆக்சிஜன் சப்ளை கிடைத்துவிட்டது. இதனால் பல உயிர்கள் ஆபத்தில் இருந்து தப்பின.

Contact Us