அரச மரத்தை நாடும் கொரோனா நோயாளிகள்; உண்மைக்காரணம் என்ன?

அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தைப் பிறப்பு இல்லாதவர்களுக்கு குழந்தைபிறக்கும் என்பது நீண்ட நாளைய நம்பிக்கை, ஆனால் இப்போது கொரோனா நோயாளிகளும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து உத்தரப் பிரதேசத்தில் அரசமரத்தை நம்பத் தொடங்கியுள்ளனர்.

உ.பி. ஷாஜகான்பூரில் பகதூர்கஞ்ச் பகுதியில் கொரோனா பாசிட்டிவ் என்றால் நேராக அரசமரத்துக்கு வந்து விடுகின்றனர். 2 குடும்பத்தின் ஆறுபேருக்கு கொரோனா பாசிட்டிவ். இவர்கள் அனைவரும் ஆக்சிஜனுக்காக அரச மரத்தினடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஊடகம் ஒன்றில் கூறும்போது, “எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையும் இல்லை, ஆக்சிஜனும் இல்லை. அரச மரத்தின் கீழ் இருந்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். என் குடும்பம் என்னை இங்கே கொண் வந்து விட்டனர். இப்போது நான் கொஞ்சம் நன்றாக உணர்கிறேன் மூச்சு விடுதல் இயல்பாக உள்ளது” என்றார்.

பாஜக எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா அந்த இடத்துக்கு வந்து மக்களைச் சந்தித்தார். கடும் கோபமடைந்த எம்.எல்.ஏ. என்ன இது அரசமரத்தடி வாசம் என்று மாவட்ட அதிகாரிகளிடம் சத்தம் போட்டு உடனே மருத்துவமனைக்கு இட்டுச் செல்லுங்கள் என்றார்.

ஆனால் ஊர்மிளா அரசமரத்தடியே நிம்மதியாக உள்ளது எனக்கு மூச்சுத் திணறல் இப்போது இல்லை மருத்துவமனை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்கிறார்.

அரச மரம் அதிக ஆக்சிஜன் கொடுக்கிறது. அதனால் இங்கு கொண்டு வந்தோம் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது ஆக்சிஜன் ஆதரவு தேவையில்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும், என்கிறார் ஊர்மிளாவின் உறவினர்.

ஆனால் மருத்துவ நிபுணர்களோ, அரச மர நம்பிக்கை உளவியல் ரீதியானதே தவிர அறிவியல் உண்மை அல்ல என்கின்றனர். அதாவது புத்துணர்வான காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்கு ரிலீஃப் ஏற்படுவதாகத் தோன்றுகிறது என்கிறார்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத போது அங்குள்ள போலீஸாரே அரச மரத்தடிக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார். போலீசார் அனைவருக்கும் இதனை சொல்கின்றனர். மருத்துவனை விஐபிக்களுக்கும் வசதியானவர்களுக்கும்தானா மற்றவர்கள் அரச மரத்தடி வாசம்தானா என்று அங்கு சமூக ஆர்வலர்களும் நலம் விரும்பிகளும் கோபப்படுகின்றனர். ஆக்சிஜன் கேட்டால் அரசமரத்தடிக்கு அனுப்புவதா என்று அங்கு கோவிட் நோயாளிகளின் உறவினர்கள் கொந்தளிக்கின்றனர்.

Contact Us