அடித்து நொறுக்கிய பா.ஜ.க..; இந்த பணியில் இருந்து வெளியேறும் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்!

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  இவற்றில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த இரு மாநில தேர்தல்களிலும் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜியை வெற்றி பெற செய்வதற்கான பணிக்காக அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுத்தப்பட்டார்.
வெற்றி பெறுவதற்கான பிரசார யுக்திகளை வகுத்து கொடுப்பதில் வல்லவரான கிஷோர், கடந்த டிசம்பரில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மேற்கு வங்காள தேர்தலில் இரண்டு இலக்க தொகுதிகளை கைப்பற்றவே பா.ஜ.க. கடுமையாக போராட வேண்டியிருக்கும்.  இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.  பா.ஜ.க. இதனை விட கூடுதலாக இடங்களை கைப்பற்றினால், இந்த பணியை விட்டு நான் விலக வேண்டும் என்று பதிவிட்டார்.

இந்த தேர்தலில், பா.ஜ.க. 75க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  இந்நிலையில், கிஷோர் அளித்துள்ள பேட்டியொன்றில், நான் தற்பொழுது மேற்கொண்டிருக்கும் பணியை தொடர விரும்பவில்லை.  நிறைவாக பணியாற்றி விட்டேன்.  நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது.  வாழ்க்கையில் ஏதேனும் செய்ய வேண்டும்.  அதனால் இந்த பணியில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

அரசியலில் மீண்டும் இணைவீர்களா? என்பதற்கு பதில் அளித்த கிஷோர், நான் ஒரு தோற்று போன அரசியல்வாதி.  அதனால், கடந்த காலத்திற்கு திரும்பி சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும் என கூறினார்.
அசாமுக்கு தனது குடும்பத்துடன் சென்று தேயிலை தோட்ட பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Contact Us