சீன்”லயே இல்லை.. இப்படி ஒரு தப்பு செஞ்சுட்டாரே தினகரன்.. சுத்தமாக வாஷ்அவுட்.. ஏன் என்னாச்சு?

என்னவெல்லாம் அரசியல் கணக்கு போட்டு வைத்திருந்தாரோ, அத்தனையும் டிடிவி தினகரனுக்கு தகர்ந்து விட்டது. இதையடுத்து, அமமுகவின் அடுத்த நிலை என்ன என்ற கேள்வியும் பிறந்துள்ளது..! இந்த முறை தேர்தலில் டிடிவி தினகரன், அதிகமாக நம்பியிருந்தது சசிகலாவைதான்.. பெங்களூரில் இருந்து வந்ததுமே, அமமுக தலைமை பொறுப்பை ஏற்க செய்ய வேண்டும், அமமுக ராயப்பேட்டை ஆபீசுக்கு அழைத்து செல்ல வேண்டும், கட்சி பொதுக்குழுவை கூட்டி, முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க வேண்டும்.. இப்படி லிஸ்ட் போட்டு கனவு கண்டு கொண்டிருந்தார்.

ஆனால் “அரசியல் விலகல்” என்ற அறிக்கையைவிட்டு தினகரன் கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் சசிகலா. அன்று இரவெல்லாம் தூங்காமலும், அதிர்ச்சி விலகாமலும், நிர்வாகிகளுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். இறுதியில், தனித்து களம் காணும் முடிவுக்கு வந்தார். இந்த இடத்தில் 2 விஷயங்களில் மிக சாதுர்யமாக செயல்பட்டார் தினகரன்.. ஒன்று, கோவில்பட்டியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டது.. மற்றொன்று தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்தது… தினகரனின் இந்த ராஜதந்திரத்தை பார்த்து அரசியல் நோக்கர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.. திமுகவே திகைத்து போய்விட்டது.. அதிமுகவோ மண்டை காய்ந்து போய்விட்டது.

இந்தத் தேர்தலில் அதிமுக எப்படியும் படு தோல்வி அடையும், நமது ஆளுமைக்குள் அதிமுகவை கொண்டு வந்துவிடலாம், அதுவரை பாஜகவையும் பகைத்து கொள்ளாமல் இருக்கலாம், தேர்தல் முடிவு வந்தபிறகு, பாஜகவை வைத்து காய் நகர்த்தி அதிமுகவை மீட்டுவிடலாம் என்பதெல்லாம் தினகரன் போட்டு வைத்த பிளான்கள் ஆகும். ஆனால், இன்றைய நிலைமையை பார்த்தால், அவர் அமமுகவை தொடர்ந்து நடத்துவாரா? இல்லையா என்பதே டவுட் ஆக இருக்கிறது.. அமமுகவை தொடங்கியதே அதிமுகவை மீட்கதான் என்று சூளுரைத்தவர், இன்று தன் கட்சியையே பத்திரமாக வைத்து கொள்ள வைக்கவும், மீட்டெடுக்கவும் தவறிவிட்டார்.. அத்துடன் சேர்ந்த தேமுதிகவும் சுவடு தெரியாமல் காணாமல் போயுள்ளது. நேற்று காலையில், ஒரு இடத்தில் கூட வெற்றியை நெருங்க முடியாத அளவுக்கு அமமுக திணறி போனது..

அவர் மட்டுமல்ல, கூட்டணியில் இருந்த தேமுதிக எஸ்டிபிஐ, மஜ்லிஸ் கட்சி போன்றவைகள், குறைந்தபட்சம் 2ம் இடத்தை கூட நெருங்க முடியாமல் சிரமப்பட்டன. இன்று அமமுகவின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரே கட்சியாக ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால், இந்த நிலை அமமுகவுக்கும் ஏற்பட்டிருக்காது, அதிமுகவுக்கும் ஏற்பட்டிருக்காது என்பது பொதுவான காரணம்.. அதேசமயம் முழுக்க முழுக்க சாதி ஓட்டுக்களை நம்பியே களம் இறங்கி விட்டார் தினகரன்.. ஆனால், இந்த சாதி ஓட்டுக்களையும் சீமான் சாதுர்யமாக பிரித்துவிட்டார் என்பதுதான் அரசியல் நுட்பமே.

அதிமுகவின் அதிருப்தியாளர்கள் எப்படியும் அமமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்றுதான் தினகரன் நினைத்திருந்தார்… ஆனால், திமுகவை அதிகமாக திட்டி தீர்த்த சீமானையே, அதிமுகவின் அதிருப்தியாளர்கள் தேர்ந்தெடுத்ததுதான் தென்மாவட்டங்களில் இன்று நடந்துள்ள அதிசயமாகும்.. அதுமட்டுமல்ல, கடம்பூர் ராஜு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட போவதாக சொல்லி மலிவு அரசியலையும் தினகரன் கையில் எடுத்திருக்க கூடாது. இதில் தேமுதிக மாபெரும் தவறு செய்துவிட்டது.. 13 தொகுதிகள் வரை கொடுக்க, அதிமுக முன்வந்தபோதே அதை ஏற்றிருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு, தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, இன்று டெபாசிட்டை இழந்து போய் உள்ளது… ஒருவேளை 12 சீட்டை அதிமுகவில் பெற்றிருந்தால், குறைந்தபட்சம் 3 இடங்களிலாவது தேமுதிக வெற்றி பெற்றிருக்கும். இப்படித்தான் விசிகவும், மதிமுகவும் திமுக கூட்டணியில் பெற்று, இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால் பிரேமலதாவின் பேராசைக்கு இது ஒரு பலத்த அடிதான்.

ஆக மொத்தம், தினகரனின் சாதி அரசியல், மாயாஜால தேர்தல் அறிக்கை, தேமுதிகவின் ஜொலிஜொலிக்கும் கனவு கோட்டை போன்றவையே அமமுக கூட்டணியின் சறுக்கலுக்கு காரணமாகி உள்ளது.. இதனால், அதிமுக ஒருபக்கம் தோற்றாலும், அமமுகவின் தடுமாற்றம் ரத்தத்தின் ரத்தங்களுக்கு மகிழ்ச்சியை தந்துவருகிறது என்றே சொல்ல வேண்டும்..!

Contact Us