கப்பலுக்குள் இந்தியர்களை தீர்த்துக்கட்ட தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் பின்னணியா?

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் லீ டுய் தாவோ என்பவருக்கு சொந்தமானது விஎஸ்ஜி பிரைட் என்ற சரக்குக் கப்பல். தென்கொரியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளி்ட்ட நாடுகளில் இருந்து இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்தில் இந்தக் கப்பல் ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 9 பேர் என 17 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இந்தியக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களும் பணியாற்றி வருகின்றனர்.

வியட்நாமைச் சேர்ந்த குழுவினர் ஒரு மாதத்திற்கு முன்பு தான் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து துாத்துக்குடிக்கு இந்தக் கப்பல் புறப்பட்டது. கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் எல்லைக்குள் இருந்த நிலையில் ஏப்ரல் 16ம் தேதி, சமையலுக்கு எண்ணெய் வேண்டும் என இந்தியக் குழுவினர், சமையலர் பாம் ஜுவான் ஹாய் என்பவரிடம் கேட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த சமையலர், எண்ணெய் கேட்கச் சென்ற இந்தியப் பணியாளர் சர்வேந்திர சிங்கை இரும்புக் கம்பியால் தோளில் தாக்கியுள்ளார். அதோடு நிற்காமல், சமையலுக்குப் பயன்படும் பெரிய கத்தியால் வயிற்றில் குத்தவும் முயன்றுள்ளார் சர்வேந்திர சிங் கத்தியைக் கையால் பிடித்து தடுத்ததில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இந்தியக் குழுவினர், கப்பலின் கேப்டனிடம் முறையிட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காயம் பட்ட சர்வேந்திர சிங்கிற்கு மருந்தும் வழங்கப்படவில்லை; அதனால் இந்தியக் குழுவினர் தங்களிடம் இருந்த மருந்தைப் பயன்படுத்தியுள்ளனர். தாங்கள் மோசமாக நடத்தப்படுவதாக இந்தியக் குழுவினர் முறையிட்டபோது, சமையலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்து வந்தவர் என்று கூறி மிரட்டப்பட்டுள்ளனர். மேலும் சமையலரின் அறைக் கதவில் ஐஎஸ்ஐஎஸ் என்று எழுதி மண்டை ஓடு வரைந்த ஒரு தாளையும் ஒட்டி வைத்துள்ளார்.

இதனால் இந்தியக் குழுவினர் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 25ம் தேதி சமையலர் தனது அறைக் குப்பைகளை இந்தியக் குழுவினர் தங்கியிருந்த வாசலில் கொட்டி மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார். அதுகுறித்து தட்டிக் கேட்டபோது மீண்டும் இந்தியக் குழுவினர் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரே நாளில் கப்பலில் வைத்து 2 வாட்களை செய்த வியட்நாமியக் குழுவினர், ஆளுக்கு ஒரு வாளை எடுத்து சண்டை போட வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர். இவை தவிர, இந்தியக் குழுவினருக்கு தினசரி, அழுகிய உருளைக்கிழங்குகள், வெங்காயங்கள் மற்றும் தக்காளிகள் மட்டுமே உணவாக வழங்கப்பட்டு வந்துள்ளன; முறையாக வழங்கப்பட வேண்டிய இறைச்சி வழங்கப்படவில்லை.

இந்தியர்கள் அருந்தும் குடிநீர் உள்ள தொட்டியில் ஓட்டை ஏற்பட்டு அதில் கடல் நீர் கலந்ததால் அந்த குடிநீரைப் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து இந்தியக் குழுவினர் புகார் மேல் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், வியட்நாமியக் குழுவினருக்கு தரமான உணவு, சுத்தமான குடிநீர் என அனைத்து வசதிகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன என்கின்றனர் இந்தியக் குழுவினர். இந்தச் சூழலில் கப்பல் துாத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது. இந்தியக் குழுவினர் ஏற்கனவே அளித்த மின்னஞ்சல் புகாரின் பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி கப்பலை விட்டு இறங்கத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியக் குழுவினரின் புகாரில் முகாந்திரம் உள்ள நிலையில், சமையலரை துாத்துக்குடியில் இறக்கினால் தான் கப்பல், போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Contact Us